ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடிகள் தண்டனை நிறைவேற்றம் - ஈரான் நீதிமன்றம் உத்தரவு!
ஈரானைச் சேர்ந்த பிரபல பாடகி பரஸ்தூ அகமதிக்கு, ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடியதற்காக நீதிமன்றம் விதித்த 74 சவுக்கடிகள் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அவர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், வெளிநாடு செல்லவும் 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஈரானின் கும் நகரில் ஆண் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பரஸ்தூ அகமதி ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திப் பாடினார். அந்த நிகழ்ச்சியை அவர் யூடியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பினார்.

ஈரானின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகக் கூறி, பரஸ்தூ அகமதி மற்றும் அவருடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் உள்பட மொத்தம் 9 பேர் மீது அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த ஈரான் நீதிமன்றம், பரஸ்தூ அகமதி உள்ளிட்டோருக்கு 74 சவுக்கடிகள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அதன்படி, தற்போது பரஸ்தூ அகமதிக்கு 74 சவுக்கடிகள் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுக்கடித் தண்டனையுடன் சேர்த்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு எவ்விதக் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது என்றும், வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நடவடிக்கை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
