வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. .இந்திய மாலுமி மாயம் - வெளியுறவுத்துறை கண்டனம்!
சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அதில் பணியாற்றி வந்த இந்திய மாலுமி ஒருவர் கடலில் மாயமாகியுள்ள சம்பவம் சர்வதேசக் கடல் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸைப்ரஸ் நாட்டுப் பதிவுக் கொடியுடன் சர்வதேசக் கடல் வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த 'ஜிஎஃப்எஸ் கேலக்ஸி' என்ற வணிகக் கப்பலைக் குறிவைத்து ஈரான் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் திடீர் மற்றும் கொடூரத் தாக்குதலால் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. இக்கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 11 மாலுமிகள் உட்படப் பல ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர்.

சர்வதேசக் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச விதிகளுக்குப் புறம்பாகப் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயணிக்கும் வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்தியா சாடியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 10 பேர் சர்வதேச மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் போது கடலில் விழுந்து மாயமானதாகக் கருதப்படும் எஞ்சிய ஒரு இந்திய மாலுமியைத் தேடும் பணிகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மாயமான மாலுமியைக் கண்டறிவதற்கான தூதரக அளவிலான முழு முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
