பதறும் உலக நாடுகள் - நாளை ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் காலி - ட்ரம்ப் விடுத்த 'பவர் பிளாண்ட் டே' மிரட்டல்!
மேற்காசியாவில் கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர், தற்போது உச்சகட்ட அழிவை நோக்கி நகர்ந்துள்ளது. ஈரானின் ஹர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு நேரடிப் போர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களுக்கான தினமாக இருக்கும். ஹர்மூஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லையென்றால், அவை அனைத்தும் முற்றிலும் தகர்க்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே "ஜலசந்தியைத் திறக்காவிட்டால் நரகத்தின் வாசல் திறக்கப்படும்" என எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது தாக்குதல் இலக்குகளை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 28-ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமான ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, உலகப் பொருளாதாரமே சிக்கலில் உள்ளது.

அதிபர் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை ஈரான் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. "எந்தச் சூழ்நிலையிலும் ஹர்மூஸ் ஜலசந்தியைத் திறக்கப் போவதில்லை" என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் நாளை (ஏப்ரல் 7) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் உள்நாட்டு உள்கட்டமைப்புகள் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
