அமெரிக்கா தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி தளங்களை ரகசியமாகச் சீரமைக்கும் ஈரான் - செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்!
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கடுமையான சேதங்களைச் சந்தித்த தங்களது முக்கிய அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்களை ஈரான் தீவிரமாக மறுசீரமைப்பு செய்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்கைக்கோள் புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான 'பிளானட் லேப்ஸ்' மற்றும் சிஎன்என் ஊடகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களின்படி, ஈரானின் மூன்று முக்கியப் பகுதிகளில் இந்த கட்டுமானப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. ஈரானின் மிக முக்கியமான ராணுவ வளாகமான இங்குள்ள 'தலேகான் 2' நிலத்தடி அணுஆயுத ஆராய்ச்சி மையத்தின் மீது விழுந்த குண்டுகளால் ஏற்பட்ட பெரிய துளைகளை ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும், அங்கு இரும்பு கம்பிகளாலான வலைகளை அமைத்து, மீண்டும் தடிமனான கான்கிரீட் மற்றும் மண்ணைக் கொண்டு அந்த நிலத்தடி தளத்தை ஈரான் பலப்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
ஈரானின் மிகப்பெரிய யுரேனியம் செறிவூட்டல் மையமான இங்குள்ள 'பிக்ஆக்ஸ் மவுண்டன்' நிலத்தடி தளத்தின் நுழைவாயில்களில் கட்டுமான வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதும், சேதமடைந்த கட்டடங்களின் மீது புதிய கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளே நடக்கும் பணிகள் வெளியில் தெரியாதவாறு மறைக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் வாயுவை உற்பத்தி செய்யும் இந்த மையத்தின் நிலத்தடி சுரங்கப்பாதைகளின் சேதமடைந்த நுழைவாயில்களை ஈரான் மண்ணைக் கொட்டி மீண்டும் மூடி பாதுகாத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது எந்தவொரு அணுசக்தி தளங்களிலும் புதிய மாற்றங்களையோ அல்லது கட்டுமானங்களையோ செய்யாமல் தற்போதைய நிலையையே பராமரிக்க வேண்டும் என்பது விதியாகும்.
இருப்பினும், இந்த ஒப்பந்தங்களை முற்றிலும் மீறும் வகையில் ஈரான் தனது அணுசக்தி திறனை மீட்டெடுக்க முயல்வது புதிய சர்வதேசப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஈரான் மீண்டும் அணுஆயுதப் பாதையை நோக்கி நகர்ந்தால், அமெரிக்கா மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என வாஷிங்டன் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
