“அமெரிக்க ராணுவ தளங்கள் வெறும் காகித புலிகள்” - ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கடும் விமர்சனம்!

 
ஈரான் உச்சத்தலைவர் காமேனி ஈரான் உச்சத்தலைவர் காமேனி

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்ப் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை "வெறும் காகித புலிகள்" என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள காமேனி, மேற்காசியப் பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவ தளங்களால் அவர்களையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்றும், அவை வலிமையற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கத் தாக்குதலின் போது அதற்கு ஆதரவாகச் செயல்பட்ட இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளை எச்சரிக்கும் விதமாகவே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா போர் ட்ரம்ப்

கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நிரந்தரப் போர் நிறுத்தத்திற்காகப் பாகிஸ்தானில் நடைபெற்ற 21 மணி நேர அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது மேற்காசியப் பகுதியில் மீண்டும் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.

அமெரிக்கா ஈரான்

பாரசீக வளைகுடா என்பது வெறும் கடல் நீர் மட்டுமல்ல, அது ஈரானின் அடையாளம் மற்றும் நாகரீகத்தின் ஒரு பகுதி என்று காமேனி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழியாகவும், நாடுகளை இணைக்கும் புள்ளியாகவும் இது திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் ஏற்கனவே இலக்காக்கப்பட்ட நிலையில், உச்ச தலைவரின் இந்தத் துணிச்சலான அறிக்கை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரானிய நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.