ஈரான் உச்ச தலைவர் காமேனியின் உடல் 'மஷ்ஹத்' நகரில் அரசு மரியாதையுடன் அடக்கம்!

 
காமேனி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சபட்ச ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் (86) உடல், சுமார் 6 நாட்களாக நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலங்களுக்குப் பிறகு, அவரது சொந்த ஊரான மஷ்ஹத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா நினைவிடத்தில் நேற்று மாலை லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானின் உச்சபட்ச தலைவராகவும், உலகெங்கிலும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் முதன்மை வழிகாட்டியாகவும் காமேனி செயல்பட்டு வந்தார்.  கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார்.

உச்ச தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதலைத் தொடுத்தது. லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹவுதி அமைப்பினரும் இஸ்ரேலுடன் நேரிடிப் போரில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்த உக்கிரமான போரால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

ஈரான் உச்சத்தலைவர் காமேனி

கடும் மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. காமேனி பிப்ரவரியிலேயே உயிரிழந்திருந்தாலும், இந்தத் தொடர் போர்க் காரணங்களால் அவரது இறுதி ஊர்வலத்தை நடத்த முடியாத சூழல் இருந்தது. இதன்பின், அவரது இறுதிச்சடங்கை நடத்துவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டது.

அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கடந்த சூலை 4-ஆம் தேதி தொடங்கிய காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் 6 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன.

காமேனி மற்றும் அவருடன் உயிரிழந்த அவரது குடும்பத்தினரின் உடல்கள் ஈரானின் புனித நகரங்களான தெஹ்ரான், கோம், நஜாப் மற்றும் கர்பலா ஆகிய நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. உலக நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த இறுதி ஊர்வலப் பேரணிகளில் ஒட்டுமொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இருப்பினும், அமெரிக்காவின் தூதரக அழுத்தம் காரணமாகச் சில மேற்கத்திய நாடுகள் இந்த இறுதிச்சடங்கைப் புறக்கணித்தன.

காமேனி

6 நாட்களாக ஈரானின் முக்கியப் புனித நகரங்களை வலம் வந்த அயதுல்லா அலி காமேனியின் உடல், நேற்று அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள புகழ்பெற்ற 'இமாம் ரெசா' நினைவிட வளாகத்தில் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால் மஷ்ஹத் நகரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

ஈரானில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய அதிகார மாற்ற சூழலையும், சன்னதிப் பகுதிகளில் திரண்டிருந்த கோடிக்கணக்கான மக்களின் கூட்ட நெரிசலையும் முறைப்படுத்த ஈரானியப் புரட்சிகரக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் பாதுகாப்புப் பிரிவு போலீசார் ஒட்டுமொத்த மஷ்ஹத் நகரையும் தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, வான்வழி ட்ரோன் கண்காணிப்புடன் கூடிய பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.