மகனின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிய குடும்பத்தினர் மீதே வழக்குப்பதிவா? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

 
உதயநிதி

மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய அவனது குடும்பத்தினர் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மதுரையில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் நடந்து 12 நாட்கள் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிகேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீதே காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவன் கொலை

இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், குற்றவாளிகளைக் கைது செய்து உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வருவதை விடுத்து, ஜனநாயக வழியில் போராடும் குடும்பத்தினரின் குரலை ஒடுக்குவதிலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதிலும் மட்டுமே காவல்துறை தீவிரம் காட்டி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இச்சம்பவத்தில் உடனடியாகத் தமிழக முதலமைச்சர் நேரில் தலையிட்டு, எந்தவித அரசியல் குறுக்கீடுகளும் இன்றி பாரபட்சமற்ற முறையில் விரைவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.