"ஆட்களை ஏவி தாக்குவது தான் மாற்று அரசியலா?" இபிஎஸ் கண்டனம்!
கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. ராமநாதனின் வீடு அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், "கும்பகோணத்தில் அதிமுக தொண்டர்களின் ரத்தமும் சதையுமான உழைப்பால் கவுன்சிலராகப் பதவிக்கு வந்தவர் ஆதிலட்சுமி. அவர் சமீபத்தில் சுயநலத்திற்காகக் குதிரை பேரக் கட்சி ஒன்றில் போய்ச் சேர்ந்தார். மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை மதிக்காமல் கட்சி மாறியதால், அவரது கவுன்சிலர் பதவியைப் பறிக்க வேண்டும் என்று சட்டப்படியாகக் கோரிக்கை விடுத்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன். இதற்காக, ராமநாதனின் வீட்டை நள்ளிரவில் அடியாட்களோடு சூழ்ந்து கொண்டு மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்."
புதிய அரசு பொறுப்பேற்றது முதல் 'மாற்று அரசியல்' மற்றும் 'தூய்மையான நிர்வாகம்' குறித்துப் பேசி வருவதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, இச்சம்பவத்தின் மூலம் தவெக அரசின் நிஜ முகம் வெளிப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
"மாற்று அரசியல் பேசும் முதலமைச்சர் அவர்களே, உங்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் கேள்வி கேட்பவர்கள் மற்றும் சட்டப்படியாகப் போராடுபவர்களின் வீடுகளுக்கு ஆட்களை ஏவி, அராஜக முறையில் தாக்குதல் நடத்துவதுதான் நீங்கள் சொல்லும் மாற்று அரசியலா?" என்று அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் அடியாட்கள் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளது.
