இந்தியா நரகத்தின் குழியா? - ட்ரம்ப்பின் கருத்தால் சர்ச்சை... கண்டுக்கொள்ளாத இந்தியா!

 
ட்ரம்ப் மோடி ட்ரம்ப் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிறப்புரிமை குடியுரிமை (Birthright Citizenship) தொடர்பான விவாதத்தில் இந்தியாவையும், சீனாவையும் ‘நரகக் குழி’ என்று குறிப்பிடும் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை கிடைக்கும் சட்டத்தை விமர்சித்து, பிரபல வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் என்பவர் எழுதிய கடிதத்தைத் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ட்ரம்ப் மீண்டும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், "சீனா, இந்தியா அல்லது உலகின் ஏதோ ஒரு நரகக் குழியிலிருந்து (Hell-hole) இங்கு வரும் மக்கள், ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் அந்தக் குழந்தைக்கு உடனடி குடியுரிமை கிடைத்துவிடுகிறது. அதன் பிறகு அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருகிறார்கள். இப்போது வரும் குடியேறிகளுக்கு அமெரிக்காவின் மீது விசுவாசம் இல்லை."

ட்ரம்ப்

மேலும் இந்திய மற்றும் சீன குடியேறிகளை "லேப்டாப் வைத்திருக்கும் குண்டர்கள்" (Gangsters with laptops) என்றும் அந்தப் பதிவு விமர்சித்துள்ளது.

ட்ரம்ப்பின் இந்தப் பதிவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்துக் கூறுகையில், இந்த விமர்சனங்கள் "தகவலற்றவை, பொருத்தமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை" (Uninformed, inappropriate and in poor taste) என்று விமர்சித்துள்ளார்.

இத்தகைய கருத்துக்கள் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான உண்மையான உறவைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்

இந்தியாவில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், "ட்ரம்ப் இந்தியாவை ஒரு சிறந்த நாடு என்றும், அதன் உயர்மட்டத்தில் உள்ளவர் (பிரதமர் மோடி) தனது நெருங்கிய நண்பர் என்றும் எப்போதும் கூறி வருகிறார்" எனத் தெரிவித்துச் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், "இந்தியாவை நரகக் குழி என்று ட்ரம்ப் கூறியிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் காயப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இதற்கு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் குடியேற்றச் சட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் சூழலில், ட்ரம்ப்பின் இந்தத் திடீர் விமர்சனம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.