இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?! - சீனாவிடமிருந்து 80% ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்.. அதிர்ச்சியூட்டும் சிப்ரி அறிக்கை!

 
பாகிஸ்தான் சீனா ஆயுதங்கள் பாகிஸ்தான் சீனா ஆயுதங்கள்

பாகிஸ்தான் ராணுவம் தனது ஆயுதத் தேவைகளுக்காகச் சீனாவை முழுமையாகச் சார்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஆயுத வர்த்தகம் குறித்து ஆய்வு செய்யும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் ராணுவ பலம் சீனாவை வைத்தே இயங்குகிறது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாகப் பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதியைச் சீனாவிலிருந்து மட்டுமே பெருமளவு செய்து வருவதாகவும், 2021-2025 காலகட்டத்தில் பாகிஸ்தான் இறக்குமதி செய்த மொத்த ஆயுதங்களில் 80 சதவீதம் சீனாவிலிருந்து வந்தவை என்றும், இது 2016-2020 காலகட்டத்தில் 73 சதவீதமாக இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.  சீனா மொத்தம் 47 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்தாலும், அதன் மொத்த ஏற்றுமதியில் 61 சதவீதம் பாகிஸ்தானுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளது. உலகிலேயே அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் 10-வது இடத்திலிருந்து தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளுமே சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன: ஜே.எஃப்-17 போர் விமானங்கள் மற்றும் தற்போது ஐந்தாம் தலைமுறை ஜே-35 (J-35) போர் விமானங்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. சீனாவிலிருந்து 8 'ஹங்கூர்' வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நான்கு போர் கப்பல்களை  வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பல்வேறு ஏவுகணைத் தளவாடங்களையும் சீனா வழங்கி வருகிறது.

இந்தியாவுக்கு இது அச்சுறுத்தலா?

பாகிஸ்தானின் இந்த அதீத ஆயுத இறக்குமதிக்குப் பின்னால் இந்தியாவுடனான பதற்றமே முக்கிய காரணமாக இருப்பதாக சிப்ரி அறிக்கை கூறுகிறது. "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கு, இரு நாடுகளையும் ஆயுதக் குவிப்பில் ஈடுபட வைக்கிறது. பாகிஸ்தான் சீனாவையும், இந்தியா ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளையும் நாடி வருகின்றன" என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கத் தயங்குவதால், வேறு வழியின்றி பாகிஸ்தான் தனது முழு நம்பிக்கையையும் சீனாவிலேயே வைத்துள்ளது. இது தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.