இந்தியர்களுக்கு பாதிப்பா?! 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ₹12.5 லட்சம் வரை விசா பிணைத் தொகை - அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்கா 12 நாடுகளைச் சேர்ந்த விசா விண்ணப்பதாரர்களுக்கு $15,000 (சுமார் ₹12.5 லட்சம்) வரை பிணைத் தொகை கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா தனது விசா பாண்ட் திட்டத்தை விரிவுபடுத்தி, புதிதாக 12 நாடுகளை இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தத் திட்டத்தில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.
வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் கம்போடியா, எத்தியோப்பியா, ஜார்ஜியா, கிரெனடா, லெசோதோ, மொரிஷியஸ், மங்கோலியா, மொசாம்பிக், நிகரகுவா, பப்புவா நியூ கினியா, சீஷெல்ஸ் மற்றும் துனிசியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பி1/பி2 (சுற்றுலா மற்றும் வணிகம்) விசா பெற பிணைத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இதில் இந்தியா இல்லை. அமெரிக்கா வெளியிட்டுள்ள 50 நாடுகளின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. பொதுவாக, அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தை விட அதிக காலம் தங்குபவர்கள் அதிகமாக உள்ள நாடுகளுக்கே இந்த விதிமுறை விதிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 'ஓவர்ஸ்டே' விகிதம் மிகக் குறைவாக (சுமார் 1.5% - 2%) இருப்பதால், இந்தியர்களுக்கு இந்த $15,000 பிணைத் தொகை விதிமுறை தற்போது பொருந்தாது.

விண்ணப்பதாரரின் பின்னணியைப் பொறுத்து $5,000, $10,000 அல்லது $15,000 எனத் தூதரக அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள். விசா காலம் முடிவதற்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறித் தாய்நாடு திரும்பினால், இந்த முழுத் தொகையும் மீண்டும் ஒப்படைக்கப்படும். சுற்றுலாப் பயணியாக வருபவர்கள் சட்டவிரோதமாக அங்கேயே தங்குவதைத் தடுக்க இந்த நிதி நெருக்கடி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இந்த பட்டியலில் வங்கதேசம், பூடான், நேபாளம், நைஜீரியா, கியூபா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
