"சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?" - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

 
ஸ்டாலின் முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வர் முதலமைச்சர்

இந்தியாவில் நிலவி வரும் கடும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எரிவாயு விநியோகம் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவை மத்திய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டவை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தற்போதைய எரிசக்தி நெருக்கடியைக் 'கோவிட் காலத்தைப் போன்ற ஒரு சூழல்' என ஒப்பிட்டுப் பேசியுள்ளார். ஏற்கனவே சிலிண்டர் கிடைக்காமல் தவித்து வரும் மக்களிடையே, பிரதமரின் இந்த ஒப்பீடு தேவையற்ற அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். எரிவாயு சிலிண்டர் வழங்குவதும், மற்ற நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?" என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்றும், மாநில அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சிலிண்டர்

எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு வருவதையும், அதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிவாயு தட்டுப்பாடு போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மத்திய அரசு தற்போது 'தொகுதி மறுவரையறை' போன்ற விவகாரங்களைக் கையில் எடுத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் (குறிப்பாக ஈரான் - இஸ்ரேல்) போர் தீவிரமடைந்துள்ளதால், 'ஹார்முஸ் நீரிணை' வழியாக இந்தியாவுக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடி நேற்று பேசுகையில், இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாகப் பன்முகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.