விஜய் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ப்பது சரியா? பரம எதிரியுடன் சமரசமா? - சேரன் கேள்வி

 
சேரன் சேரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வருவது குறித்து இயக்குநர் சேரன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விஜய்யின் அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி தர்மம் குறித்துப் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், "காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்குத் திமுகவின் வாக்கு வங்கிதானே முக்கிய காரணம்? அப்படி இருக்கும்போது, அந்த வெற்றியைத் தவெக தனது கணக்கில் சேர்த்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?"

விஜய் ஆளுநர்

"தேர்தலுக்கு முன் விஜய்யுடன் கூட்டணி வைக்க மறுத்த கட்சிகளை, இப்போது ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக இணைத்துக்கொள்வது, மக்கள் வழங்கிய தனித்துவமான அங்கீகாரத்தை அவமதிக்கும் செயல் அல்லவா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் களத்தில் யாரைத் 'தீயசக்தி' என்றும் 'எதிரி' என்றும் விஜய் விமர்சித்தாரோ, அதே கூட்டணியில் இருந்த கட்சிகளைத் தற்போது அரவணைப்பது அரசியல் முரண்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய் திருமா

தவெக-வின் பலம் 116-ஆக உயர்ந்துள்ள நிலையில், இயக்குநர் சேரனின் இந்தக் கருத்துக்கள் தவெக ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை தேவைப்படுவதால் இது தவிர்க்க முடியாதது" என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், சேரன் சொல்லும் "மக்களின் உண்மையான தீர்ப்பு" குறித்த கருத்து நடுநிலையாளர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.