வடகொரியாவின் அடுத்த வாரிசு 'கிம் ஜூ ஏ'?! - தந்தையை மிஞ்சும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி!
வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் அன்னிற்குப் பிறகு, அந்த நாட்டின் உயரியப் பதவியை அவரது மகள் கிம் ஜூ ஏ (13) அலங்கரிக்கப் போவதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தென்கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வெறும் யூகம் அல்ல என்றும், இதற்கான வலுவான மற்றும் நம்பகமான உளவுத் தகவல்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கிம் ஜூ ஏ-வை அடுத்தத் தலைவராக முன்னிறுத்துவதற்கானப் பல அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக வடகொரியாவின் மிக முக்கியமான ராணுவ நிகழ்வுகளில் கிம் ஜாங் அன்னுடன் அவரது மகளும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது, கிம் ஜூ ஏ ராணுவ டாங்கிகளை ஓட்டிப் பழகியுள்ளார். ராணுவ வீரர்களுக்கு இணையாகத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இது அவர் ஒரு வலிமையானத் தலைவராக உருவாக்கப்படுவதைக் காட்டுகிறது.
வடகொரிய அரசு ஊடகங்கள் கிம் ஜூ ஏ-வைச் சாதாரணப் பெண்ணாகப் பார்க்காமல், அவருக்கு உயரிய மரியாதையை வழங்கி வருகின்றன. நாட்டின் உயரியத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'வழிகாட்டும் மாபெரும் நபர்' என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்துச் செய்திகளிலும் அவர் 'மதிப்பிற்குரிய மகள்' என்றே விளிக்கப்படுகிறார்.

வடகொரியா என்பது தந்தைவழிச் சமூக அமைப்பைக் கொண்ட நாடு. அங்கு ஒரு பெண்ணைத் தலைவராக ஏற்றுக்கொள்வதில் மக்களுக்குச் சிக்கல் எழக்கூடும். இதனைத் தவிர்க்கவே, மிகச் சிறிய வயதிலேயே (13 வயது) அவரை மக்களிடையே அறிமுகப்படுத்தி, ராணுவ பலத்தைக் காட்டி ஒரு 'ஹீரோ' பிம்பத்தை வடகொரிய அரசு கட்டமைத்து வருவதாகத் தென்கொரியா கருதுகிறது.
கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த பல்வேறு வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், வாரிசு குறித்த இந்தத் தகவல் ஆசிய அரசியலில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
