மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? ஈரான் வெளியிட்ட வீடியோவால் தொடரும் பரபரப்பு!

 
மொஜ்தபா கமேனி ஈரான்

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போன்ற காணொளி ஒன்றை ஈரானிய அரசு செய்தி நிறுவனமான 'மெஹ்ர்' முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

மொஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனின் நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'தி ஜெருசலேம் போஸ்ட்' வெளியிட்ட செய்தியில், "அவரது வீரமரணம் குறித்த செய்தி விரைவில் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் அவரது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மொஜ்தபா பொறுப்பேற்றார். இருப்பினும் அவர் நேரடியாகப் பொதுவெளியில் தோன்றாமல், எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மூலமாகவே தொடர்பில் இருந்து வருகிறார்.

தந்தையின் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்டத் தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உருக்குலைந்திருக்கலாம் என்றும், அதனால் தான் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சி மற்றும் மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமேனியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தற்போது மிகவும் கடினமாக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கமேனி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில், தாக்குதலுக்குப் பின் கமேனி "90% அழிந்து விட்டார்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜூலை மாதம் சவூதி செய்தி நிறுவனமான அல்-ஹதாத், கமேனி ஈரானிலேயே இல்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது. கமேனியின் காயங்கள் குறித்து வெளியான கூற்றுகளை ஈரானிய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. அவருக்கு ஏற்பட்டது மேலோட்டமான காயங்கள் மட்டுமே என்றும், அவர் தொடர்ந்து நாட்டின் முக்கியமான மூலோபாய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார் என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே தற்போது மெஹ்ர் செய்தி நிறுவனம் தேதியிடப்படாத இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது. இருப்பினும், நேரடி பொது உரைகளில் அவர் தோன்றாததால், ஈரான் தலைமையின் நிலைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.