நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதில் சிக்கல்? ரூ.4 கோடி விவகாரம் - செக் வைத்த திமுக!
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ. 4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி (CB-CID) ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மாநிலங்களவை திமுக உறுப்பினர் கிரிராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி மூல வழக்குப் பதிவு செய்திருந்தும், இதுவரை அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோர் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அமலாக்கத்துறை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யத் தயங்குகிறது.

இந்த ஊழல் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ள நிலையில், திமுக எடுத்துள்ள இந்தச் சட்ட நடவடிக்கை பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், நயினார் நாகேந்திரன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில் அல்லது பரப்புரையில் ஈடுபடுவதில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
