“அரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலைக் கைவிடுவதா?” - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

 
அன்புமணி

தமிழக அரசின் நேரடிக் கடன் அளவைக் குறைத்துக் காட்டுவதற்காக, உழவர்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொறுப்பைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து கூட்டுறவு அமைப்பான டான்பெட் நிறுவனத்திற்கு மாற்ற அரசு திட்டமிடுவதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அரசு தனது பிற கடன் தேவைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, நெல் கொள்முதல் கட்டமைப்பைச் சிதைக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிப் பொறுப்புடமை மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டத்தின்படி, ஓராண்டில் மாநில அரசால் வாங்கப்படும் நேரடிக் கடன் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். 2026-27-ஆம் ஆண்டில் தமிழகத்தின் GSDP மதிப்பு ரூ.40.67 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக ரூ.1.21 லட்சம் கோடி மட்டுமே கடன் வாங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

அரசின் நேரடிக் கடன் இந்த வரம்பைத் தாண்டும் சூழல் உருவாகியுள்ளதால், நெல் கொள்முதலுக்குத் தேவைப்படும் ரூ.11,000 கோடியை அரசின் கணக்கில் வராமல் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்திடம் ரூ.10,000 கோடி கடன் கோரி டான்பெட் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 1973 முதல் காவிரி பாசன மாவட்டங்களிலும், 2002 முதல் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்ட முறையிலும் உழவர்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து வருவதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுக்குச் சுமார் 4.50 லட்சம் டன் உரங்களை வாங்கி கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகிக்கும் பணியை மட்டுமே டான்பெட் செய்து வருவதாகவும், ஆண்டுக்கு 60 லட்சம் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான கட்டமைப்புகளோ மனிதவளமோ டான்பெட் அமைப்பிடம் கிடையாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

ஏற்கெனவே டான்பெட் உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளின் நிதிநிலை பலவீனமாக உள்ள சூழலில், அவற்றின் மீது கூடுதல் கடன் சுமையை ஏற்றினால் உழவர்கள் வழங்கிய நெல்லுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்க முடியாத நிலை உருவாகும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது ஒரு கட்டத்தில் நேரடி நெல் கொள்முதலுக்கே மூடுவிழா நடத்த வழிவகுக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.

மத்திய அரசிடமிருந்து நெல் கொள்முதல் தொகை திரும்பக் கிடைக்கச் சுமார் 18 மாதங்கள் ஆவதால் ஏற்படும் நிதித் தேவையைச் சமாளிக்க, மாநில அரசு தனது பிற தேவையற்ற செலவுகளையும் கடன்களையும் குறைக்க வேண்டுமே தவிர, உழவர்களைப் பாதிக்கும் வகையில் நெல் கொள்முதல் பணியை நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து மாற்றக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.