கார் கண்ணாடி உடைப்புக்கு அரசியல் விமர்சனம் காரணமா? ஜேம்ஸ் வசந்தன் பரபரப்பு பேட்டி!

 
ஜேம்ஸ் வசந்தன் ஜேம்ஸ் வசந்தன்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரம், தற்போது அரசியல் ரீதியான விவாதமாக உருவெடுத்துள்ளது. இது வெறும் சமூக விரோதிகளின் செயலா அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக்குதலா என்ற கோணத்தில் பரபரப்பு பேட்டிகள் மற்றும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

ஜேம்ஸ் வசந்தன் சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்தச் சூழலில், அவர் உணவகத்திற்குச் சென்றிருந்தபோது அவரது கார் தாக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இது எதேச்சையாகச் சமூக விரோதக் குறும்புக்காரர்கள் செய்த 'தறுதலை'த்தனமா? அல்லது நான் முன்வைக்கும் விமர்சனங்களால் ஆத்திரமடைந்த 'தற்குறிகளின்' வேலையா என்று தெரியவில்லை." என்று தனது வேதனையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருவதால், அவரது இந்தப் பதிவிற்கு கீழே ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், இந்தத் தாக்குதலில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்களுக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது குறித்து முறையான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஜேம்ஸ்

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியா அல்லது திட்டமிட்ட அச்சுறுத்தலா என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.