ரூ.634 கோடி முறைகேடு வழக்கில் ‘செம்பருத்தி' நடிகைக்கும் தொடர்பா? - நடிகை ஷபானா ஷாஜஹான் அறிக்கை!
நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி நியமன முறைகேடு வழக்கில் தனது பெயர் மற்றும் புகைப்படங்கள் தவறாகப் பரப்பப்படுவது குறித்து 'செம்பருத்தி' சீரியல் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜஹான் கடும் கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரில், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த முறைகேட்டுப் பணம் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர்கள் மூலம் சில சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் பரிமாற்றம் செய்யப்பட்டதாகச் சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் தகவல்கள் வெளியாகின.

தனது பெயர் தேவையில்லாமல் இதனுடன் இணைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஷபானா, "கடந்த இரண்டு நாட்களாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் என் பெயரும் புகைப்படங்களும் பரப்பப்படுகின்றன. இந்த வழக்கில் கூறப்படும் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணத்திலாவது என் பெயர் உள்ளதா? எந்த அடிப்படையில் என் பெயரை இதில் கொண்டு வந்தீர்கள்?" எனச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தன்னை இழிவுபடுத்தும் வகையிலும் பாலியல் ரீதியாக ஆபாசமாகச் சித்தரித்தும் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வெளியிடப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இது தன் மீதான கடுமையான தனிநபர் தாக்குதல் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

முற்றிலும் பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய இந்தச் செய்திகளைப் பரப்பியவர்கள், உண்மை தெரியவரும் போது அதே வேகத்தில் தங்களின் தவறைத் திருத்திக் கொண்டு எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவார்களா என்றும் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், நடிகை ஷபானா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
