“இப்படி ஒரு அசிங்கம் தேவையா?” – முதல்வர் விஜய்க்கு எடப்பாடி காட்டமான கேள்வி!

 
எடப்பாடி

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் பொறுப்புகளில் தலையிட்டதைச் சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்குத் தேவையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என ஏற்கெனவே தான் அறிவுறுத்தியிருந்ததை நினைவுகூர்ந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப். வசம் ஒப்படைத்ததையும், அறங்காவலர் குழுவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் தலைமையில் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எடப்பாடிவிஜய் எடப்பாடி

உச்சநீதிமன்றம் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள "நிர்வாகச் சீர்குலைவு, வெளிப்படையான மற்றும் திட்டமிட்ட கீழ்ப்படியாமை, அப்பட்டமான அலட்சியம், அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு எதிரான திட்டமிட்ட அவமதிப்பு" மற்றும் "அரசியலமைப்புச் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடும்" ஆகிய சொற்களைப் பட்டியலிட்டுள்ள அவர், ஒரு அரசை நோக்கி இத்தகைய காட்டமான வார்த்தைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை எனக் கூறியுள்ளார்.

தமிழகச் சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியுள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டம், அரசியலமைப்பு மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை மாண்புக்குரியவை என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் கல்தூண்

அவை சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் காற்றாடி, கார் பொம்மைகளைப் போல அல்ல எனக் குறிப்பிட்ட அவர், இனியாவது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண வேண்டும் எனத் த.வெ.க. அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.