அமெரிக்கக் கனவு கலைகிறதா? உயர்கல்வி சேரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 6.9% சரிவு!
உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளது. 2025-ல் 3.78 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வந்தனர். 2026-ல் இந்த எண்ணிக்கை 3.52 லட்சமாகக் குறைந்துள்ளது. ஓராண்டில் மட்டும் சுமார் 6.9 சதவீதம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு கொண்டு வரப்பட்டுள்ள சில மாற்றங்களே இதற்கு முதன்மைக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன: மாணவர் விசா பெறுவதற்கான நேர்காணல்கள் மற்றும் ஆவணச் சரிபார்ப்பு முறைகள் முன்பை விடக் கடுமையாக்கப்பட்டுள்ளன.
விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் கடந்த காலப் பதிவுகளை அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் விசா மறுக்கப்படுகிறது. படிப்பை முடித்த பிறகு அங்கேயே தங்கிப் பணியாற்றுவதற்கான விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மாணவர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன.

இந்திய மாணவர்களின் நலன் மற்றும் கல்வி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து அமெரிக்க அரசிடம் தூதரக ரீதியாகத் தொடர்ந்து பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.
