திமுக கூட்டணியை உடைக்கிறதா காங்கிரஸ்?... விஜய்க்கு ஆதரவளிக்க திருமாவிடம் பேசிய கார்கே!

 
கார்கே திருமா கார்கே திருமா

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணை எட்ட இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்க்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தமிழக காங்கிரஸ் ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய கார்கே, தற்போதைய அரசியல் சூழலில் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்துள்ளார்.

அதிமுக - பாஜக ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறுவது  ஒரு வகையான பில்டப் மட்டுமே...  திருமா விளாசல்!

டெல்லியில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், பாஜக-வை எதிர்க்கும் புதிய வியூகத்தின் ஒரு பகுதியாகவும் விஜய்க்கு ஆதரவு அளிக்குமாறு திருமாவளவனிடம் அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது தவெக-வின் பலம் 114-ஆக உயர்ந்துள்ளது. விசிக-வின் 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால், விஜய்யின் பலம் சரியாக 118-ஐ எட்டும்.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஏற்கனவே ஒரு பக்கம் நிற்க, விசிக-வும் அந்த அணிக்கு வந்தால் திமுக கூட்டணி முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்படும். எ.வ.வேலுவுடனான ரகசியச் சந்திப்பிற்குப் பிறகு, கார்கேவிடமிருந்து வந்த இந்த அழைப்பு திருமாவளவனைப் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் திருமா

காங்கிரஸ் கட்சி இவ்வளவு வெளிப்படையாகத் தவெக-விற்கு ஆதரவு திரட்டுவது திமுக தலைமையைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. "கூட்டணி தர்மத்தை மீறி காங்கிரஸ் செயல்படுகிறது" என திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கார்கேவின் இந்தத் தலையீடு, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அச்சை (Axis) உருவாக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.