"தேமுதிகவுக்கு அங்கீகாரமில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி!

 
பிரேமலதா பிரேமலதா

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக - தேமுதிக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. தேமுதிகவை அங்கீகாரம் இல்லாத கட்சி என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதற்கு, ஆதாரங்களுடன் பிரேமலதா விளக்கியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக தமிழகத்தின் மூன்றாவது பெரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இதைப் புரியாமல் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலைக் கூறி வருகிறார். நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதால்தான், ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளிலும் எங்களது சொந்தச் சின்னமான முரசு சின்னத்தில் போட்டியிடுகிறோம்."

பிரேமலதா

"திமுக தலைமையிலான எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். நாங்கள் கேட்ட பல தொகுதிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. தொகுதிப் பங்கீட்டில் நாங்கள் முழு திருப்தியுடன் இருக்கிறோம்."

கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில், தேமுதிகவின் அரசியல் அந்தஸ்து குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தது அக்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு இன்று பிரேமலதா முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

 ஈபிஎஸ்  பிரேமலதா

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா தலைமையில் தேமுதிக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், முரசு சின்னத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது பலத்தை நிரூபிக்கவும் அக்கட்சி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.