“திமுகவின் பணநாயகத்திற்குத் தேர்தல் ஆணையம் துணை போகிறதா?” - நகைகள் விநியோகம் - அண்ணாமலை புகார்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த அண்ணாமலை, தேர்தல் முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாகக் கோவையில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணத்தையும் நகைகளையும் வாரி வழங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

“திமுகவினர் இவ்வளவு தைரியமாகவும் பகிரங்கமாகவும் பணத்தையும் நகைகளையும் கொடுப்பதை நான் பார்த்ததே இல்லை. இதற்கு முன்னால் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த முறை அத்துமீறல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன,” என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்றாலும், களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மாநில அரசு ஊழியர்களாக இருப்பதால் நடுநிலையுடன் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டார். முறைகேடுகளைத் தடுக்க ஆணையம் இன்னும் கடுமையாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது வாதமாக இருந்தது. தேர்தல் முறைகேடுகள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றி வருவதாக அண்ணாமலை பாராட்டினார். "வெயில் மற்றும் போக்குவரத்துக் குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும். பணபலத்தை விட மக்களின் மனபலமே இந்தத் தேர்தலில் வெல்லும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவையிலிருந்து பிற ஊர்களுக்கும் செல்லப் போதிய பேருந்து வசதிகள் செய்யப்படாததால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், இதனைத் தேர்தல் ஆணையம் முன்கூட்டியே திட்டமிட்டுச் சரி செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சாடினார்.
