"வாயை மூடிக்கொண்டு இருக்கிறதா அரசு?" - மாணவர் தனுஷ் படுகொலைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

 
தனுஷ் உதயநிதி

சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தமிழ்நாடு அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சில தினங்களிலேயே, சென்னையில் பிளஸ்-2 மாணவர் தனுஷ் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சட்டம் ஒழுங்கின் தோல்வியைக் காட்டுகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக விரோதிகளுக்கு அரசு மற்றும் சட்டத்தின் மீது பயமில்லை என்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்காமல் அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவன் கொலை

போதைப் பொருள் புழக்கம் மற்றும் விற்பனையைத் தட்டிக் கேட்பவர்கள் கொலை செய்யப்படுவது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மாணவர் தனுஷ் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் பின்னணியில் இயங்கும் கும்பல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களிடையே வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் பள்ளிகளில் கவுன்சிலிங் (Counselling) மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்.

திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த தனுஷ் (16), மாணவர்களுக்கிடையேயான பிணக்கு மற்றும் முன்விரோதம் காரணமாகப் பேருந்து நிலையம் அருகே அழைத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகத் திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.