"திமுக திட்டத்தை முடக்குவதுதான் அரசின் நோக்கமா?" - கனிமொழி எம்பி காட்டமான கேள்வி!
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக நிதி வழங்ாகமல், தவெக அரசு மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகத் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்குக் கடந்த சில மாதங்களாக உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருவதாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாயின.
இச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி எம்பி, "முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கவே அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் கொண்டு வரப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் இத்திட்டத்தைத் திட்டமிட்டுச் செயலிழக்கச் செய்வதுதான் அரசின் நோக்கமா எனத் தவெக அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளுக்குக் கூட பணமின்றித் தவித்து வரும் சூழலில், உடனடியாக நிலுவையில் உள்ள உதவித்தொகை நிதியை வழங்கி அவர்களது படிப்பைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
