தமிழகத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டரா? - வட இந்திய ஊடகங்களில் தீயாய் பரவும் வதந்தி!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் நேரடியாகத் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது என்கவுண்டர் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளதாக வட இந்தியச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வட இந்திய இந்தி இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில், "தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் இந்துவாகவோ, முஸ்லிமாகவோ அல்லது எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள்; நேரடியாகத் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது என்கவுண்டர் செய்யப்படுவார்கள்" எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்ததாக ஒரு தகவல் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

சட்டப் நடைமுறைகளைத் தாண்டி இத்தகைய அதிரடி உத்தரவை அரசு பிறப்பித்துள்ளதாக இந்தி பேசுபவர்களிடையே இத்தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இத்தகவல் முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது.
பாலியல் குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு வரும் நிலையில், என்கவுண்டர் அல்லது நேரடித் தூக்கு தண்டனை தொடர்பாக எவ்விதமான உத்தரவோ அல்லது அறிவிப்போ பிறப்பிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் இதுபோன்ற போலிச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
