மக்களுக்கு வழங்கும் பைகளில் கூட ஊழலா? திமுக ஐடி விங் வீடியோவால் சர்ச்சை!

 
தவெக பை

தமிழ்நாட்டில் தவெக புதிய அரசு பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் துணிப்பைகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பெண் ஒருவர் வெளியிட்ட காணொளியும், அதனைத் தொடர்ந்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைதளப் பதிவும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தின் பையையும், தற்போதைய தவெக ஆட்சியில் வழங்கப்பட்டு வரும் புதிய துணிப்பையையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

அந்தத் துணிப்பையானது தண்ணீரில் நனைந்த உடனேயே தரம் குறைந்து, எளிதில் கரைந்து விடுவதாக அந்தப் பெண் தனது வீடியோவில் நேரடி ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டியுள்ளார். அதே நேரத்தில், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட மஞ்சப்பையை எத்தனை முறை துவைத்தாலும் அதன் தரம் குறையாமல் நீடித்து உழைப்பதையும் அவர் ஒப்பிட்டுக் காட்டி, தவெக அரசின் இந்த நடவடிக்கை குறித்துத் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.


இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் ஆகியோரை விமர்சித்துப் பதிவிட்டுள்ளது.

"தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன் எனப் பொதுவெளியில் வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே... ஆட்சிப் பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள், தான் சுற்றுலாத்துறை அமைச்சரா அல்லது சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதைச் சுயபரிசோதனை செய்யும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என அனைத்தையும் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!"

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து குறுகிய காலமே ஆகியுள்ள நிலையில், மின்வெட்டுப் பிரச்சினைகளுக்குக் கால அவகாசம் கேட்பது, குற்றச் சம்பவங்களைத் தடுக்காமல் முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவது போன்ற செயல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருவதாக விமர்சித்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏற்கனவே அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கும் போது, தவெகவினர் "நாங்கள் ஆட்சிக்குப் புதிது, நேரம் கொடுங்கள்" எனக் கூறுவது நிர்வாகத்திறனற்ற தன்மையையே காட்டுவதாக எதிர்க்கரப்பினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் பிரச்சாரமாக்கி வருகின்றனர்.