"தமிழ்நாட்டில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா?" - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
தமிழகத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது" என்று கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சர் விஜயைக் 'களவாணி' என்று நேரடியாகக் குறிப்பிட்டு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிமுக தற்பொழுது ஆட்சியில் இல்லாவிட்டாலும், தமிழக மக்களின் நலனுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து முன்னின்று குரல் கொடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
அதிமுகவின் பலம் குறித்துப் பேசிய அவர், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளைக் கைப்பற்றித் தனது பலத்தை நிரூபித்துள்ளது என்றும், சேலம் மாவட்டம் எப்போதும் போலவே அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கி வருவதையும் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.
தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் பேசப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நுழைந்துள்ள பரபரப்பான சூழலில், இபிஎஸ்-ஸின் இந்த காரசாரமான பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
