"உங்க பொண்ணு நடத்துற பள்ளியில் தமிழ் இருக்கிறதா?" - ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

 
அண்ணாமலை ஸ்டாலின் அண்ணாமலை ஸ்டாலின்

மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் குறித்துத் தவறான வாதங்களை முன்வைப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பழக்கமாகிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவது குறித்து முதலமைச்சர் வெளியிட்ட கருத்திற்குப் பதிலடியாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2026-27 ஆம் கல்வியாண்டு முதல் இடைநிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் மும்மொழிக் கல்வி முறையைச் சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து அண்ணாமலை, “பயிற்றுவிக்கப்படும் மூன்று மொழிகளில், இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும், அந்தந்த பிராந்திய மொழிகளுடன் சேர்த்து வழங்கப்படுகின்றன. இதில் இந்தித் திணிப்பு என்பது எங்குள்ளது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

கடந்த ஆண்டே தாய்மொழி அல்லது வீட்டு மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்குச் சிபிஎஸ்இ அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தினர் மற்றும் திமுக அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளைக் குறிப்பிட்டு அண்ணாமலை சில அதிரடி கேள்விகளை முன்வைத்துள்ளார். "சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வரும் முதலமைச்சரின் மகளின் பள்ளியில், தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறதா என்பதை முதலமைச்சர் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்."

உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறதா? என அவர் வினவியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைக்கும் வாதங்கள் எந்தவிதமான ஆய்விற்கும் தாக்குப்பிடிக்காது என்றும், அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து மத்திய அரசு மீது அவர் பழி சுமத்தி வருவதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.