இப்படியெல்லாமா கடத்துவாங்க... ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!

 
விமானம் விமான நிலையம்

மும்பை விமான நிலையத்தில் சுங்கச் சோதனைகளை ஏமாற்றி, இறக்குமதி செய்யப்பட்ட டிரெட்மில் இயந்திரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டு கடத்த முயன்ற ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹாங்காங்கிலிருந்து மும்பை விமான சரக்கு வளாகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட டிரெட்மில் இயந்திரங்களின் தொகுப்பு ஒன்றில் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இறக்குமதி செய்யப்பட்ட டிரெட்மில் இயந்திரத்தின் மோட்டாருக்குள், சாதாரண வர்த்தகச் சரக்கின் ஒரு பகுதி போலத் தோற்றமளிக்கும் வகையில் வளைந்த வடிவிலான 24 காரட் தங்கக்கட்டி மிகவும் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

தங்கம் கடத்தல் லஞ்சம் பறிமுதல் நகைகள் கொள்ளை

அதிகாரிகளால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு மீட்கப்பட்ட அந்தத் தங்கக் கட்டியின் மொத்த எடை 691.870 கிராம்கள் ஆகும். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சர்வதேச தங்கக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி சீன நாட்டவர் ஒருவர் மற்றும் இறக்குமதி நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொருவர் என மொத்தம் இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு வெவ்வேறு இடங்களிலும் குழுவினர் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பும் இதே போன்ற முறைகளில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் இதில் தொடர்புடைய பிற நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.