கூண்டோடு ராஜினாமா செய்யும் அமமுக நிர்வாகிகள் - தனித்து விடப்படுகிறாரா டிடிவி தினகரன்?!

 
டிடிவி தினகரன் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை, கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து டிடிவி தினகரன் நீக்கியதே இந்த அரசியல் பூகம்பத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.  கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களைத் தலைமை பாரபட்சமாக நடத்துவதாகக் கூறி, நிர்வாகிகள் நீண்டகாலமாக அதிருப்தியில் இருந்து வந்தனர். சட்டமன்ற உறுப்பினரின் நீக்கம், 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல' நிர்வாகிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது.

ராமநாதபுரம்m அமமுக

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் விலகி இருப்பது, தென் மாவட்டங்களில் அமமுக-வின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது.

ராஜினாமா செய்த நிர்வாகிகள் விரைவில் தங்களது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் ஆளுங்கட்சியான தவெக அல்லது பிரதான எதிர்க்கட்சியான திமுக-வில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

அமமுக

தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருவது டிடிவி தினகரனுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்த அமமுக, தற்போது உட்கட்சிப் பூசல்களால் சிதைந்து வருவது அக்கட்சித் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.