"விஜய் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா?" - முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
சட்டப்பேரவை விதிகள் மற்றும் சபாநாயகரின் உத்தரவுகளை முதலமைச்சர் சி.ஜே.விஜய் மீறிச் செயல்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும் திமுக மூத்த நிர்வாகியுமான அப்பாவு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சட்டமன்றப் பாரம்பரியம் மற்றும் உறுப்பினர்களின் நடத்தை குறித்து தற்போதைய சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை, அடுத்த நாளே முதலமைச்சரே மீறியிருப்பது 'அவை உரிமை மீறல்' ஆகாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன. அவையின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு, "சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் தங்களது உடல் மொழியாகவோ, வாய்மொழியாகவோ மற்ற உறுப்பினர்களைக் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது" என்று சபாநாயகர் அவையில் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் அப்பாவு, "சபாநாயகர் இந்த உத்தரவைப் பிறப்பித்த அடுத்த நாளே, முதலமைச்சர் விஜய் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டுள்ளார். தற்பொழுது அவையில் இல்லாத முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் அவையிலேயே கிண்டலாகப் பேசி, கேலி செய்துள்ளார்" என்று சுட்டிக்காட்டினார்.
அவையில் இல்லாத ஒரு தலைவரை, அதுவும் சபாநாயகரின் உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் அவ்வாறு விமர்சித்தது முறையற்றது என்று அப்பாவு சாடியுள்ளார்.
"சாதாரண உறுப்பினர்கள் தவறு செய்தாலே நடவடிக்கை எடுக்கும் சட்டப்பேரவை, முதலமைச்சரின் இந்தச் செயலை எப்படி அனுமதித்தது? சபாநாயகரின் உத்தரவை முதலமைச்சரே மதிக்காதபோது, மற்ற உறுப்பினர்கள் எப்படி மதித்து நடப்பார்கள்? எனவே, முதலமைச்சர் விஜய் செய்தது அப்பட்டமான அவை உரிமை மீறல் செயல் ஆகும். அவர் மீது தற்போதைய பேரவைத் தலைவர் உரிய அவை உரிமை மீறல் நடவடிக்கையை எடுப்பாரா?" என்று அப்பாவு காட்டமாக வினவியுள்ளார்.
