அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு - 'முழு வலிமையுடன் பதிலடி' என எச்சரிக்கை!

 
இஸ்ரேல் இஸ்ரேல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்ற தணிப்பு நடவடிக்கையாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 19ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இச்சூழ்நிலையில், இந்த ஒப்பந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையேயான இந்த புதிய நகர்வு குறித்து இஸ்ரேல் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களிம்படி, இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர் கூறுகையில், "அமெரிக்காவும் ஈரானும் போட்டுக் கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தமும் இஸ்ரேலைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் ஒரு சுயாதீனமான நாடு. எங்களது நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ, அதைச் செய்ய இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் விடுத்துள்ள அவசர எச்சரிக்கையில், "ஈரான் அணுசக்தித் திட்டங்களை முன்னிறுத்தியோ அல்லது மறைமுகக் குழுக்கள் மூலமாகவோ இஸ்ரேல் மீது ஏதேனும் தாக்குதல்களை நடத்த முற்பட்டால், இஸ்ரேல் ராணுவம் தனது முழு வலிமையையும் கொண்டு ஈரானுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகங்கள், உளவுத்துறைத் தரவுகளின்படி, இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதி ஒப்பந்தத்தில்  ஈரானின் அணுசக்திச் செறிவூட்டல் திட்டங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் அதற்குப் பதிலாக ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது குறித்து இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எனினும், ஈரானின் அணு ஆயுதப் பெருக்கம் தங்களது நாட்டின் அச்சுறுத்தலாக மாறும் என இஸ்ரேல் கருதுவதால், அமெரிக்காவின் இந்த சமரசப் போக்கை இஸ்ரேல் தலைவர்கள் தொடர்ந்து கடுமையாக விமரிசித்து வருகின்றனர்.

அமெரிக்கா - ஈரான்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா எடுத்து வரும் இந்த தூதரக முயற்சிகளுக்கு, அதன் மிக நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலே பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.