பகீர்... அமெரிக்கக் கப்பல்களைத் தகர்க்க டால்பின் தற்கொலைப்படை... ஈரானின் அதிரடி போர் வியூகம்!

 
dolphins dolphins

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஈரான் மோதி வரும் சூழலில், அமெரிக்கக் கடற்படைக்கு எதிராக ஈரான் ஒரு வினோதமான போர் யுக்தியைக் கையில் எடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களை அழிக்க, பயிற்சியளிக்கப்பட்ட 'டால்பின்' மீன்களைத் தற்கொலைப்படை வீரர்களாகப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனிடமிருந்து வாங்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த டால்பின்களின் உடலில் அதிநவீன வெடிபொருட்களைப் பொருத்தித் தாக்குதல் நடத்த ஈரான் வியூகம் வகுத்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள கடும் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்க ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. வழக்கமான போர் முறைகளை விட, கடலுக்கு அடியில் மறைந்து சென்று தாக்கும் இந்த 'கடற்படை சீக்ரெட் ஏஜென்ட்' டால்பின்கள் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக இருக்கும் என ஈரான் கருதுகிறது. இருப்பினும், போருக்காகக் கடல்வாழ் உயிரினங்களைப் பயன்படுத்துவதற்கு ராணுவ வல்லுநர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் இத்தகைய தாக்குதல்கள் நடந்தால், அது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துப் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ஈரானின் இந்த புதிய 'டால்பின்' அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கக் கடற்படை தற்போது தீவிரமாகப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.