ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் நாளை விண்ணில் பாயத் தயார்... இறுதி கட்டப் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

 
isro

 

இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான ‘நேவிக்’ சேவையை வலுப்படுத்தும் வகையில், என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோளைச் சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி.-எப்18 ராக்கெட் நாளை (அக். 30) விண்ணில் ஏவப்பட உள்ளது.ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 11.51 மணிக்கு ராக்கெட் ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

நேவிக் அமைப்பை மேம்படுத்தும் என்.வி.எஸ்.-03

சுமார் 2,250 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோள், பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு மாற்றுச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரமும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் இந்தியாவின் நிலப்பரப்பு முழுவதற்கும், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் சுமார் 1,500 கிலோமீட்டர் வரையிலான பகுதிக்கும் இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரம் தொடர்பான தகவல்களை வழங்கும் நேவிக் அமைப்பின் சேவைகளை மேம்படுத்த உதவும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 20-வது பயணம்

ஜி.எஸ்.எல்.வி.-எப்18, இந்த வகை ராக்கெட்டின் 20-வது விண்வெளிப் பயணமாகும். முந்தைய என்.வி.எஸ்.-02 செயற்கைக்கோளை அதன் இறுதிச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களுக்குப் பிறகு, புதிய செயற்கைக்கோள் ஏவப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.எனினும், செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர், அதன் சுற்றுப்பாதை நிலைநிறுத்தம் மற்றும் செயல்பாட்டுச் சோதனைகள் நிறைவடைந்த பிறகே முழுமையான சேவைகள் தொடங்கும்.