ரூ.10,000 கோடி செலவில் விண்வெளிக்குச் செல்லும் இந்திய ரோபோ - ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ சாதனை!

 
ககன்யான் இஸ்ரோ ககன்யான் இஸ்ரோ

விண்வெளிக்குச் செல்லும் இந்திய ரோபோ: ரூ.10,000 கோடி ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ சாதனை!இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் மிகக் குறைந்த செலவில் விண்வெளி ஆய்வுகளில் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் 'ககன்யான்' திட்டத்தை நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ், மனிதர்களை அனுப்பும் முன்பாக 3 ஆளில்லா ராக்கெட்டுகளை அனுப்பிப் பலகட்ட சோதனைகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ

இந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக, 'வியோமித்ரா' என்ற பெயர் கொண்ட பெண் ரோபோவைச் சுமந்து கொண்டு இஸ்ரோவின் முதல் ஆளில்லா ராக்கெட் 2026-ஆம் ஆண்டின் பிற்பாதியில் விண்ணில் பாயத் தயாராகி வருகிறது. இந்த முதல் சோதனையில் ராக்கெட்டின் வேகம், விண்வெளியில் அதன் செயல்பாடு மற்றும் மீண்டும் பத்திரமாகப் பூமிக்குத் திரும்புவது போன்ற மிக முக்கியமான தொழில்நுட்பங்கள் ஆய்வு செய்யப்படும். ஏற்கனவே இதற்கான ஏர் டிராப் சோதனைகள் மற்றும் இயந்திரப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதால், இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது.

இஸ்ரோ

இந்தத் திட்டத்தின் இறுதி இலக்காக வரும் 2027-ஆம் ஆண்டில் 3 இந்திய விண்வெளி வீரர்கள் 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி வட்டப் பாதையில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்குத் தற்போது சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ககன்யான் திட்டம் முழுமையாக வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். இது இந்திய அறிவியல் துறையின் 100 ஆண்டுகாலக் கனவை நனவாக்கும் ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.