காலையிலேயே அமலுக்கு வந்தது... 13 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக அமல்!
தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஆட்டோக் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை இன்று முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக அரசு கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணச் சலுகையை எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி 'வெற்றிப் பயணம்' திட்டத்தைத் தொடங்கியது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ள சூழலில், 2013-க்குப் பிறகு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இக்கட்டண மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
| பிரிவுகள் |
முந்தைய கட்டணம் (2013) |
புதிய கட்டணம் (2026) |
| குறைந்தபட்ச தூரம் |
முதல் 1.8 கி.மீ |
முதல் 1.8 கி.மீ |
| குறைந்தபட்ச கட்டணம் |
₹25 |
₹50 |
| கூடுதல் கி.மீ. கட்டணம் |
₹12 / கி.மீ |
₹25 / கி.மீ |
| மலைப்பாதை (குறைந்தபட்சம்) |
- |
₹60 (1.8 கி.மீ வரை) |
| மலைப்பாதை (கூடுதல் கி.மீ) |
- |
₹30 / கி.மீ |
இரவு நேரக் கட்டணம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரையிலான பயணங்களுக்குச் சாதாரணக் கட்டணத்தை விட 1.5 மடங்கு (ஒன்றரை மடங்கு) கட்டணம் வசூலிக்கப்படும் (பகலில் ₹50 வரும் பயணத்திற்கு இரவில் ₹75 கட்டணம்).

ஆட்டோ காத்திருக்கும் நேரத்திற்கு நிமிடத்திற்கு ₹1 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளபோதிலும், தினசரி ஆட்டோவைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
