இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... ஆன்லைன் வருகையில்லா பத்திரப்பதிவு திட்டம் - பதிவுத்துறை ஐஜி வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்!
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தே ஆவணங்களைப் பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ முறை மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையைத் திறம்படச் செயல்படுத்த பதிவுத்துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன் சார்பதிவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
தாக்கல் செய்யப்படும் பத்திரங்களை ஒரே நாளுக்குள் பரிசீலித்து பதிவு செய்து தர வேண்டும். நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தைக் குறிப்பிட்டு உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். ஏதேனும் தவறுகளுக்காகத் திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களை பொதுமக்கள் 30 நாட்களுக்குள் திருத்தம் செய்து மீண்டும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பதிவு நிறைவடைந்தவுடன் சார்பதிவாளர்கள் அதில் தங்களின் டிஜிட்டல் கையொப்பமிட்டு பயனாளியின் கணக்கிற்கு அனுப்ப வேண்டும்.

தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில் ஆவணதாரர்களின் சரியான கையெழுத்து இருக்கிறதா என்பதையும், அதற்குரிய வில்லங்கச் சான்றிதழ்கள் முறையாகப் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதையும் சார்பதிவாளர்கள் கட்டாயம் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். ஆதாரங்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணதாரரின் புகைப்படம் நீல நிறத் திரையில் தெளிவாகத் தெரிகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
திட்டம் தொடங்கப்பட்டுள்ள போதிலும், இணையதளத்தின் சர்வர் திறன் உடனடியாக அதிகரிக்கப்படாத காரணத்தால் தொடக்கத்தில் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தாளர்கள் சில தொழில்நுட்பச் சிக்கல்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதைச் சரிசெய்ய பதிவுத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
