நாடு முழுவதும் அமலுக்கு வந்தது... 14 ஆண்டுகளுக்குப் பின் பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்தியது மத்திய அமைச்சகம்!

 
பாஸ்போர்ட்

இந்தியப் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் உயர்த்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'பாஸ்போர்ட் (திருத்தச்) விதிகள் 2026'-இன் கீழ் இந்த புதிய கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று ஜூலை 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஏறத்தாழ 14 ஆண்டுகள் கழித்துத் தான் பாஸ்போர்ட் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அரசாணையின்படி, மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டணங்களின் படி,  36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்   புதிதாகப் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் அல்லது காலாவதியான பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பவர்களுக்கான கட்டணம் இதுவரை ₹1,500 ஆக இருந்த நிலையில்,  ₹2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்

அவசரத் தேவைகளுக்காகத் தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் 36 பக்கங்கள் கொண்ட அவசர பாஸ்போர்ட்டுகளுக்கான கட்டணம் ₹3,500-லிருந்து ₹5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்களுக்காக வழங்கப்படும் 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் சாதாரண கட்டணம் ₹2,000-லிருந்து ₹3,500 ஆகவும், அதன் தட்கல் கட்டணம் ₹4,000-லிருந்து ₹6,000 ஆகவும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டணங்கள் பெருமளவு உயர்த்தப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட சில பிரிவினருக்குப் புதிய விண்ணப்பங்களின் போது தள்ளுபடி சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புதிய பாஸ்போர்ட்டுக்குச் சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டணத்திலிருந்து 10 விழுக்காடுசலுகை வழங்கப்படும். எனினும், இந்தச் சலுகை பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்குப் பொருந்தாது.

பாஸ்போர்ட்

உங்களுடைய 36 பக்கப் பாஸ்போர்ட் தொலைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, அதற்கு மாற்றாகப் புதிய பாஸ்போர்ட் பெற இனி சாதாரண முறையில் ₹5,000 மற்றும் தட்கல் முறையில் ₹7,500 கட்டணமாகச் செலுத்த வேண்டும் (60 பக்கப் புத்தகத்திற்கு இது முறையே ₹6,000 மற்றும் ₹8,500 ஆகும்).

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 36 பக்கப் பாஸ்போர்ட் கட்டணம் ₹1,000-லிருந்து ₹1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (தட்கல் கட்டணம் ₹4,250). வேலைவாய்ப்பு மற்றும் விசா தேவைகளுக்காகப் பெறப்படும் காவல்துறை சான்றொப்பம் மற்றும் பாஸ்போர்ட் சரண்டர் சான்றிதழ்களுக்கான கட்டணம் ₹500-லிருந்து ₹750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான சர்வதேசத் தரம் வாய்ந்த காகிதங்களின் விலை உயர்வு, பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களின் நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகிய காரணங்களினாலேயே இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இன்று முதல் பாஸ்போர்ட் இணையதளத்தில் ஆன்லைன் கட்டணம் செலுத்துவோர் அனைவருக்கும் இந்த புதிய கட்டண முறையே பொருந்தும்.