"நான் செத்தாலும் பரவாயில்லை, முதல்வர் விஜய்யைப் பார்க்கணும்" - நடுரோட்டில் கதறியழுது பெண் போராட்டம்!

 
போராட்டம்

சென்னை தலைமைச் செயலகம் முன்பாகத் தனது நிலத்தை மீட்டுக் தரக் கோரி, பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் இல்லாத ஏழைப் பெண் ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தைச் சிலர் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை தலைமைச் செயலகத்திற்குத்  த.வெ.க. முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் புகாரளிக்க அந்தப் பெண் வந்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி கிடைக்காததால், மனமுடைந்த அந்தப் பெண் திடீரெனத் தலைமைச் செயலகம் அருகேயுள்ள முக்கியச் சாலையில் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த காவலர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோது, "நான் செத்தாலும் பரவாயில்லை, முதலமைச்சர் விஜய்யை நேரில் பார்த்தே ஆக வேண்டும். அவரிடம் தான் எனது புகாரைக் கொடுப்பேன்" எனக் கண்ணீர் விட்டு கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.

முக்கியச் சாலையில் அந்தப் பெண் அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மீட்டு, சாலையிலிருந்து அப்புறப்படுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தனது நிலத்தை மீட்டுக் கோரிப் பெண் ஒருவர் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கக் கோரி நடுரோட்டில் கதறியழுத இச்சம்பவம், தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.