"மசோதாவை நிறைவேற்ற முடியாதது வருத்தம்...” - கோவை கொடிசியாவில் பிரதமர் மோடி உருக்கம்!

 
மோடி மோடி

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மேடையில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) வேட்பாளர்களைப் பிரதமர் மோடி முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் இந்த முறை ஆட்சி மாற்றம் உறுதி என்பதைத் தனது பேச்சில் வலியுறுத்தினார்.

மோடி

"தமிழக மக்கள் மிகவும் தெளிவான முடிவில் உள்ளனர். இந்தத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதும், திமுக படுதோல்வியைச் சந்திக்கும் என்பதும் உறுதியாகிவிட்டது" என்று பிரதமர் முழங்கினார். திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டதை அலை அலையாகத் திரண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டம் உணர்த்துவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசிய பிரதமர், "எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலில் தடம் பதித்து, நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால், திமுக மற்றும் காங்கிரஸின் வெறுப்பு அரசியலால் அந்த மகளிர் மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது" என்றார். பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள கட்சிகளுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.