வயதானவர்களுக்கும் வரபிரசாதம்... மாதுளையில் இத்தனை சத்துக்களா? எப்படி சாப்பிட்டால் பலன் அதிகம் தெரியுமா?!
தினசரி உணவுப் பழக்கத்தில் பழங்களைச் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிக முக்கியமான ஒரு பழக்கமாகும். அவற்றில், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகவும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் இயற்கை மருந்தாகவும் திகழ்வது மாதுளம்பழம். மாதுளையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், மாதுளையை முழுப் பழமாக மென்று சாப்பிடுவதற்கும், அதை ஜூஸாகக் குடிப்பதற்கும் இடையே சில முக்கிய வித்தியாசங்களும், தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
மாதுளை ஜூஸ் குடிப்பதால் மாதுளைச் சாற்றில் உள்ள சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்கள், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றன. உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் மாதுளை ஜூஸை தொடர்ந்து அருந்தி வரும்போது, ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி இதயம் பாதுகாக்கப்படுகிறது.
மாதுளை சாற்றில் 'அந்தோசயனின்' மற்றும் 'புனிகலஜின்' போன்ற சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள செல்லினங்களை சேதப்படுத்தும் 'ஃப்ரீ ரேடிக்கல்களை' எதிர்த்துப் போராடி, புற்றுநோய் செல்கள் உருவாவதையும் அதன் வளர்ச்சியையும் தடுக்கப் பெருமளவில் உதவுகின்றன.
வயதானவர்களுக்கு மாதுளை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். மாதுளம் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வரும் போது, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து நினைவாற்றல் மேம்படுகிறது. அல்சீமர் போன்ற மறதி நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி உடலுக்கு உடனடிப் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

மாதுளையை ஜூஸாகக் குடிக்கும்போது அதிலிருக்கும் நார்ச்சத்தின் பெரும் பகுதி பிழிந்து வெளியேற்றப்படுகிறது. ஆனால், பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள முழுமையான நார்ச்சத்தும் நமக்குக் கிடைக்கிறது. இது செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கிறது.
உடலில் நீர்ச்சத்து குறையும் காலங்களில், மாதுளம் பழ முத்துக்களை அப்படியே சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் நீரேற்றமும் இயற்கையாகவே கிடைக்கிறது. பழமாகச் மென்று சாப்பிடும்போது, எச்சிலுடன் சேர்ந்து ஊட்டச்சத்துக்கள் உடலில் மிகச் சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன.
ஜூஸாகக் குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக உயர வாய்ப்புள்ளது. ஆனால், பழமாக நார்ச்சத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது, சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகம் மெதுவாகி, ரத்த சர்க்கரை அளவு சீராகப் பராமரிக்கப்படுகிறது.
உடனுக்குடன் புத்துணர்ச்சி பெறவும், இதய ஆரோக்கியத்தைப் பேணவும் மாதுளை ஜூஸ் மிகச் சிறந்த தேர்வாகும். அதேசமயம், உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் செரிமானச் சிக்கல் உள்ளவர்கள் மாதுளையை ஜூஸாகக் குடிப்பதை விட, பழமாகவே மென்று சாப்பிடுவது முழுமையான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். இயற்கை தந்த வரமான மாதுளையை நம் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து, ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!
