நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது... ஏப்.1 முதல் ஃபாஸ்டேக் கட்டணம் உயர்வு - 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் மாற்றங்கள்!
இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணச் சலுகையைப் பெற்று வந்த ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் கட்டணத்தை உயர்த்துவதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
இதுவரை ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் பெறுவதற்கு ரூ.3,000 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது ரூ.3,075-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 75 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.

இந்த ஒரு வருட பாஸைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகள் ஒரு ஆண்டு முழுவதும் அல்லது அதிகபட்சமாக 200 பயணங்களை எவ்விதத் தடையுமின்றி மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு பாஸ் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய கட்டணத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு பாஸை வாகன ஓட்டிகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான 'Rajmarg Yatra' (ராஜ்மார்க் யாத்ரா) செயலி வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்தச் செயலி மூலம் சுங்கச்சாவடிகளில் உள்ள நெரிசல் மற்றும் பயண நேரத்தைத் திட்டமிடுவதற்கான வசதிகளையும் பெற முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாகவே, தற்போது ஃபாஸ்டேக் பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிரச் சில குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் தனிநபர் ஒருமுறை பயணக் கட்டணமும் (Single Trip) 3% முதல் 5% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
