"மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வருக்கு ஆதரவளிப்பது எனது கடமை" - நடிகர் மாதவன்!

 
மாதவன்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஜி.டி.என்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, நடிகர் மாதவன் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் குறித்துப் பேசியுள்ளார். தான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை என்றும், அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் மாதவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

"நம் நாட்டின் மக்கள் ஒருவரை முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ தேர்ந்தெடுத்தால், அவருக்கு ஆதரவளிப்பது குடிமகனாக எனது கடமை. அரசியலை மிகவும் பொறுப்பான விஷயமாகப் பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் தனக்கு வைக்கப்படும் விமர்சனங்கள் தனது முடிவுகளைப் பாதிப்பதில்லை என்றும், இதைக் கொண்டு காயப்படுத்த நினைப்பவர்களின் நோக்கத்தையே கேள்வி கேட்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

'ஓஹோ எந்தன் பேபி' பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில், 'இந்தியாவின் எடிசன்' என்றழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ளது. மாதவனுடன் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தணிக்கை வாரியத்தின் 'U/A' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 7 அன்று வெளியாகிறது.