இன்று ரிலீஸ் கிடையாது... ‘தி கேரளா ஸ்டோரி- 2’ படத்திற்கு ரிலீஸ் செய்ய உயர்நீதிமன்றம் தடை!

 
தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி படம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே சமயம் படம் குறித்த சர்ச்சையாக கருத்துக்களும் வலம் வந்தன. படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனதுமே எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாக இருந்த நிலையில், மத ரீதியான கருத்துகள் மற்றும் கேரள மாநிலத்தைச் சித்தரிக்கும் விதம் தொடர்பாக எழுந்த புகார்களை அடுத்து, இன்று படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி 2

கேரளாவை வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் இந்தப் படம் சித்தரிப்பதாகவும், இது வெளியானால் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறி, பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மதத் தீவிர மயமாக்கல் குறித்துப் படம் தவறான தகவல்களைப் பரப்ப வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் வாதிட்டனர். 

இந்தப் படம் தணிக்கை வாரியத்தால் முறையாக ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளது என்றும், படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதால், வெளியிட தடை விதித்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும், வெறும் இரண்டு நிமிட டீசரை மட்டும் பார்த்துவிட்டு முழுப் படத்தையும் மதிப்பிட முடியாது என்றும் தயாரிப்புத் தரப்பினர் வாதிட்டனர். 

கேரளா

இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்க வேண்டியது அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார். நீதிமன்ற விசாரணை நிறைவடைந்து இறுதித் தீர்ப்பு வரும் வரை, பொது அமைதியைக் கருத்தில் கொண்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதே முறை எனத் தெரிவித்த நீதிமன்றம், அதுவரை படத்தைத் திரையிடத் தடை விதித்தது.

டீசர் வெளியான போதே மனுத் தாக்கல் செய்யாமல் தாமதமாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தயாரிப்புத் தரப்பு சுட்டிக்காட்டிய போதிலும், நீதிமன்றம் இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை கருதி இடைக்காலத் தடையை உறுதி செய்துள்ளது. இதனால் இன்று வெளியாகவிருந்த இப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.