சிகரெட் பழக்கத்தைக் கண்டித்ததால் காதலனை கடத்திய ஐ.டி. பெண் ஊழியர்!
சென்னையில், சிகரெட் பிடித்ததைக் கண்டித்த காதலனை, காதலியே ஆள் வைத்துத் தூக்கியதாக வெளிவந்துள்ள செய்தி சினிமா பாணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அரங்கேறியுள்ள இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞரும், அந்தப் பெண்ணும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த அந்தப் பெண், பின்னர் ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ஐ.டி. நிறுவனத்தில் சேர்ந்த பிறகு, அவர் தனது காதலனைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று காதலி பணிபுரியும் நிறுவனத்தின் அருகே அந்த இளைஞர் தற்செயலாகச் சென்றுள்ளார். அப்போது, தனது காதலி பொது இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதிர்ச்சியில் அதனை அவர் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது.

தனது பழக்கத்தைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த காதலி, தனது நண்பர்கள் சிலரை வரவழைத்துள்ளார். அவர்கள் அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்ற இடத்தில் அந்த இளைஞரைக் காதலியின் நண்பர்கள் கடுமையாகத் தாக்கியதாகவும், இது குறித்துத் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காதலனைத் தனது நண்பர்கள் மூலம் கடத்தித் தாக்கிய புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
