இன்று அதிகாலை தொடங்கியது... ஈரானில் கமேனி உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி; இந்தியப் பிரதிநிதிகள் நேரில் மரியாதை!

 
கமேனி

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடலுக்குப் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கான சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் இன்று ஜூலை 5ம் தேதி அதிகாலை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் திரண்டு வந்து தங்களது தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அப்போது நிலவிய கடுமையான போர்ச் சூழல் காரணமாக அவரது உடல் அடக்கம் உடனடியாக நடைபெறவில்லை. தற்போது பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், அவரது உடல் அடக்கத்துக்கான 6 நாட்கள் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்போது முறைப்படி தொடங்கியுள்ளன.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி

ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட அலி கமேனியின் சவப்பெட்டி, தலைநகர் தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற மொசல்லா பெரிய மசூதியில் வைக்கப்பட்டுள்ளது. அதே தாக்குதலில் பலியான கமேனியின் ஒரு வயது பேத்தியின் உடல் அடங்கிய சவப்பெட்டியும் அதனருகே வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று கண்ணீர் மல்கத் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர். மறைந்த ஈரான் உச்ச தலைவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் வேளையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் டெஹ்ரான் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பீகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கமேனியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

ஈரான் கமேனி

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மொசல்லா பெரிய மசூதியின் வாயில்கள் இன்று அதிகாலை திறக்கப்பட்டன. கமேனியின் உடலைக் காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானில் குவிந்துள்ளனர். வரிசையில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், கமேனியின் படுகொலைக்குக் காரணமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனக் கோஷங்களை எழுப்பினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்வு வரும் ஜூலை 6-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், தற்போதைய கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின்  தாக்குதல் அபாயம் காரணமாக, புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் நேரில் பங்கேற்கவில்லை என்ற விபரம் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தெஹ்ரான் அஞ்சலிக்குப் பிறகு கமேனியின் உடல் வரும் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஷியாக்களின் புனித நகரங்களான ஈராக்கின் நஜஃப் மற்றும் கர்பலாவிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து, இறுதி நாளான ஜூலை 9-ஆம் தேதி ஈரானின் வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் அவரது உடல் முறைப்படி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.