"கரூரில் இருந்து விஜய் கிளம்பியது தான் புத்திசாலித்தனம்... இல்லன்னா 81 உயிர் போயிருக்கும்" - நாஞ்சில் சம்பத் அதிரடி!

 
நாஞ்சில் சம்பத்

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்ட த.வெ.க சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு தனது பாணியில் அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார்.

மேடையில் பேசிய நாஞ்சில் சம்பத், "இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக த.வெ.க உருவெடுத்துள்ளது. டெல்லியில் இருக்கும் எஜமானர்களையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருக்கும் எஜமானர்களையும் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்ட ஒரே தலைவர் இந்தியாவிலேயே எங்கள் தலைவர் விஜய் மட்டும்தான். தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை விஜய் தனது விஸ்வரூபத்தால் நிரப்பி வருகிறார். வரும் தேர்தலில் விஜய்யின் இந்த விஸ்வரூபத்திற்கு முன்னால் பல கட்சிகள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போகப்போவது உறுதி" என ஆவேசமாக பேசினார்.

கரூர்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விமர்சித்த அவர், "மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என திமுக அரசு பகல் கனவு காண்கிறது. ஆனால் அந்த லேப்டாப்பை வாங்கிய மாணவர்கள் அனைவரும் அதில் எங்கள் தலைவர் விஜய்யின் படத்தைத்தான் வால்பேப்பராக வைத்துள்ளனர். விஜய் முதலமைச்சரானால் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 திட்டத்தை நிறுத்திவிடுவார் என வதந்தி பரப்புகிறார்கள். ஒரு அரசின் திட்டம் மக்களுக்கான நல்ல திட்டமாக இருந்தால், எங்கள் ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டம் தொடருமே தவிர நிறுத்தப்படாது" எனத் தெளிவுபடுத்தினார்.

சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட சலசலப்பு குறித்துப் பேசிய நாஞ்சில் சம்பத், "கரூர் சம்பவத்தின் போது விஜய் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றது மிகச் சரியான மற்றும் புத்திசாலித்தனமான முடிவு. அவர் அங்கேயே தொடர்ந்து நின்றிருந்தால், அவரைக் காண்பதற்காகப் பல லட்சம் மக்கள் திரண்டிருப்பார்கள். அப்படி கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிருந்தால், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 81 ஆகக் கூட உயர்ந்திருக்க வாய்ப்பு இருந்தது. ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது, பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காகவே அவர் அங்கிருந்து புறப்பட்டார்" என விளக்கம் அளித்தார்.

இறுதியாக, "ஜனநாயகம் எனும் சக்தியை உங்களால் தள்ளிதான் வைக்க முடியும், மக்களிடம் இருந்து எங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதைத் தேர்தல் களத்தில் நிரூபிப்போம்" எனக்கூறி தனது உரையை முடித்தார்.