"தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது தவறு" - அதிமுக எம்.எல்.ஏ பேட்டி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தனது ஆதரவை உறுதிப்படுத்திய ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், தவெக அரசுக்கு ஆதரவளித்தது தாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அணியில் இருந்து கொண்டு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது குறித்துச் சுகுமார் சுயவிமர்சனமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

"தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம். அப்படி ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்தது ஒட்டுமொத்தமாக நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்துள்ளோம்" என்று அவர் செய்தியாளர்களிடம் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தாய்க்கழகத்திற்குத் திரும்பியது குறித்துப் பேசிய அவர், "அரசியலில் சில சூழல்களால் ஏற்பட்ட அந்தத் தவறை தற்பொழுது முழுமையாகத் திருத்திக் கொண்டுள்ளோம். அதனால்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒற்றைத் தலைமையையே முழுமையாக ஏற்று மீண்டும் அவரிடமே வந்துள்ளோம்.

இனிவரும் காலங்களில் அதிமுகவின் வளர்ச்சிக்கும், கழகத்தின் கட்டளைகளுக்கும் இணங்கத் தொகுதியில் முழுவீச்சில் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்று சுகுமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள், தவெக அரசுக்குத் தாங்கள் அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சட்டப்பேரவை வாக்கெடுப்பில் பங்கேற்ற முடிவே தவறு என அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தற்பொழுது பகிரங்கமாகக் குற்றம் சாட்டத் தொடங்கியிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
